மத்தியப் பிரதேசத்தின் “கலாச்சார தலைநகரம்” என்று அழைக்கப்படும் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தின் 5-ஆம் பிளாட்பாரத்தில் சமோசா விற்பனையாளர் ஒருவரின் அசம்பாவித நடத்தை சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. அதாவது ஒரு பயணி சமோசா வாங்கி UPI மூலம் பணம் செலுத்த முயன்றபோது, பரிவர்த்தனை தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. ரயில் புறப்படவிருந்த நிலையில், பயணி பிளாட்பாரத்தை விட்டு வெளியேற முயன்றபோது, சமோசா விற்பனையாளர் அவரது காலரைப் பிடித்து, வலுக்கட்டாயமாக அவரது கைக்கடிகாரத்தை கழற்றி எடுத்துக் கொண்டார்.

இந்த சம்பவம் “Honest Cricket Lover” என்ற சமூக ஊடகப் பயனரால் X  தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், ரயில் மெதுவாக புறப்படும் தருணத்தில் பயணிக்கும் விற்பனையாளரும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தெளிவாகக் காணப்படுகிறது. பயணி தப்பிக்க முயற்சிக்க, விற்பனையாளர் அவரது கைக்கடிகாரத்தை பிடித்து எடுத்து செல்வது வீடியோவில் வெளிப்படையாக தெரிகிறது.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜபல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) உடனடியாக சம்பவத்தைப் பற்றி அறிந்து விசாரணை உத்தரவிட்டார். சில மணி நேரங்களுக்குள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) குற்றம் சாட்டப்பட்ட விற்பனையாளரை கைது செய்தது. அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அவரது விற்பனை உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

DRM ஜபல்பூர் தனது சமூக ஊடகப் பதிவில், “வீடியோ சரிபார்க்கப்பட்டுள்ளது, குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளின் பாதுகாப்பு எங்களின் முதன்மை. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து QR குறியீடு அடிப்படையிலான கட்டண முறைகள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் எந்தவித துன்புறுத்தல் அல்லது மோசடியையும் சந்தித்தால், உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைன் அல்லது RPF-ஐத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.