மதுரையில் தூய்மைப் பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய விசிக தலைவர் திருமாவளவன், தன்னை ‘பாஜக வளர்த்த பிள்ளை’ என விமர்சித்த சீமானுக்கு விரிவான பதிலடி கொடுத்துள்ளார்.
2001-ம் ஆண்டு தான் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டது திமுகவுடனான கூட்டணியில் தானே தவிர, பாஜக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். மேலும், திமுகவுடனான கருத்து வேறுபாட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை இரண்டரை ஆண்டுகளிலேயே துறந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மறைந்த பாஜக தலைவர் இல. கணேசன் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஒரு மனிதராக அவர் மீது அன்பு செலுத்துவது வேறு, அவர்களின் அரசியலை ஏற்பது வேறு என்றும் குறிப்பிட்டார்.
சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசியம் என்பது பெரியாரியத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக் கூடாது என விமர்சித்த திருமாவளவன், இடதுசாரி அரசியலைச் சிதைக்கும் வகையில் பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
