தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற பெயரில் மேற்கொண்டு வரும் மாநிலத் தழுவிய பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று (டிசம்பர் 29) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேடையில் பாரம்பரிய ‘வள்ளி கும்மி’ நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்த போது, நயினார் நாகேந்திரனும் அண்ணாமலையும் அவர்களுடன் இணைந்து கும்மி அடித்து நடனமாடியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ‘எடப்பாடி எனும் நான்’ என்று முதலமைச்சராகப் பதவியேற்கும் நாள் மிக விரைவில் வரும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
கொங்கு மண்டலம் எப்போதும் போலத் தங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும் என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்கவே கூட்டணி அமைத்துச் செயல்படுவதாக விமர்சித்தார். அண்ணாமலையைத் தனது ‘நிரந்தர சகோதரர்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நயினார்,
“நரேந்திர மோடியும் அமித்ஷாவும் என்ன நினைத்து இந்தக் கூட்டணியை உருவாக்கினார்களோ, அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான உண்மையான ஆட்டம் இனிமேல்தான் இருக்கப்போகிறது” என்று முழங்கினார்.
