தமிழகச் சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் த.வெ.க, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு தரப்பினர் மக்கள் விஜய்க்கு வாக்களித்ததை விமரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த நடிகர் சிவக்குமார், மக்களின் தீர்ப்பை விமரிசிப்பவர்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும், எளிமையின் சிகரமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரையே அன்றைய மக்கள் தோற்கடித்து மாற்றத்தைக் கொண்டு வந்த வரலாற்றுச் சம்பவத்தையும் அவர் இங்கு நினைவூட்டியுள்ளார்.

திமுகவின் நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு தற்போதைய இளந்தலைமுறை தனக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட சிவக்குமார், மக்கள் எப்போதும் நீதிபதிகள் போன்றவர்கள் என்றும், அவர்களின் முடிவைத் தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

குறிப்பாக, இந்தத் தேர்தலில் 95% மக்கள் எவ்விதப் பணமும் வாங்காமல் நேர்மையாகவும், பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் த.வெ.க-விற்கு வாக்களித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

“>

 

விஜய் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புவோம் எனத் தெரிவித்த அவர், மக்களுக்கு முழுமையான அறிவு விழிப்புணர்வு வரும்போது சினிமா மற்றும் அரசியல் துறையின் தேவைகள் மாறும் என்ற தனது எதார்த்தமான சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.