சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற சிக்கல்களால் சாதாரண மக்கள் சமையல் செய்வதற்கு பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில், மாற்றுத் தீர்வாக அனைவரும் இண்டக்ஷன் (Induction) அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அங்கேயும் சாமானியர்களுக்கு ‘ஜிஎஸ்டி’ வடிவில் ஒரு செக் வைக்கப்பட்டுள்ளதை மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.

​”இந்தக் கஷ்ட காலத்தில் மக்கள் அனைவரும் இண்டக்ஷன் அடுப்பை வாங்க ஓடுகிறார்கள், ஆனால் அந்த அடுப்புக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த சிலிண்டர் பிரச்சனை முடியும் வரையிலாவது அந்த 18 சதவீத வரியை அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அப்படிச் செய்தால் மக்களிடம் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தனது பாணியில் ‘நச்’ எனத் தெரிவித்துள்ளார். மக்களின் அன்றாடப் பிரச்சனையை ப்ளூ சட்டை மாறன் கையில் எடுத்துள்ளதால், இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.