உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், 1999 கார்கில் போரில் பங்கேற்ற தியாகியின் மகளும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தவருமான 23 வயது இளம்பெண் ரியா குமாரி தாபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அவர், தனது முதல் முயற்சியில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட ரியா, தற்கொலைக்கு முன் “ஐ லவ் யூ மாம், டாட்” என்று உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

“>

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பிரேம்நகர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கடுமையான தேர்வு அழுத்தமே இந்த துரதிர்ஷ்டவசமான முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் எல்லையைக் காத்த ராணுவ வீரரின் மகள், தேர்வு பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தனது உயிரை மாய்த்துக் கொண்ட இந்தத் துயரச் சம்பவம், மாணவர்களிடையே அதிகரித்து வரும் கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் கையாள்வதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.