பாஸ்டனைச் சேர்ந்த இந்திய பெண் தொழில்முனைவோரான சினேகா பிஸ்வாஸ், கடந்த 2020-ஆம் ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இன்டர்னாக பணியாற்றியபோது, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
மேலும் 82 வயதான ரத்தன் டாடா, எந்தவொரு பந்தாவும் இல்லாமல் சினேகாவின் மின்னஞ்சலைப் படித்து சில மணி நேரங்களிலேயே அவருக்குப் பதிலளித்தார். அதுமட்டுமின்றி, அவரது அலுவலகத்தில் இருந்து சினேகாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அதில், ரத்தன் டாடா சினேகாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், அதற்கு வசதியான தேதியைக் குறிப்பிடுமாறும் கேட்கப்பட்டது.
ஆனால், அதே நாளில் சினேகா மேற்படிப்பிற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குப் பறக்க வேண்டியிருந்ததால், “அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்” என்று எண்ணி அந்தச் சந்திப்பைத் தவிர்த்தார். துரதிர்ஷ்டவசமாக, அதன் பிறகு அவருக்கு ரத்தன் டாடாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் ரத்தன் டாடா காலமானதைத் தொடர்ந்து, சினேகா பிஸ்வாஸ் தனது லிங்க்டின் பக்கத்தில் இந்த மின்னஞ்சல் உரையாடலைப் பகிர்ந்துள்ளார். ஒரு பெரிய தலைவரைச் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை தவறவிட்டதுதான் தன் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம் மற்றும் வருத்தம் என்று அவர் அதில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
