பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டின் இறுதிநாளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிரடி பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் ஏற்கனவே வருகை தந்து அமர்ந்திருந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறுதியாக வந்து சேர்ந்தார். அவர் கூட்ட அரங்குக்குள் நுழைந்த உடனே அங்கிருந்த அனைத்து உலகத் தலைவர்களையும் பார்த்து, நகைச்சுவையான தொனியில் “ஐ ஆம் தி பாஸ்” (நானே பாஸ்) என்று கூறி கெத்து காட்டினார்.
தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் முதுகில் தட்டி தனது பாணியில் வாழ்த்து தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவினாலும், ஜப்பான் நாடு சீனாவினாலும் பெரும் அழுத்தங்களைச் சந்தித்து வரும் வேளையில், ட்ரம்பின் இந்த “பாஸ்” கமெண்ட் உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீண்டும் உணர்த்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
“I’m the boss.” 🤣
— @POTUS arrives for a working session at the G7 summit in France pic.twitter.com/BvAamZo0sD
— Rapid Response 47 (@RapidResponse47) June 17, 2026
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே ஒரு முக்கிய ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற ஜி-7 நாடுகளின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதுடன், உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவியையும், சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான அனுமதியையும் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான், கத்தார் அமீர் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
