பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டில், அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கு இடையே உலகத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட ரகசிய மற்றும் வேடிக்கையான உரையாடல்கள் அங்குள்ள மைக்ரோபோன்களில் பதிவாகி வெளியில் கசிந்துள்ளது. குறிப்பாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தான் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு ஒரு மாதமாகிறது என்று கூறியதைக் கேட்டு கனடா, பிரிட்டன், ஜப்பான் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தவறவிட்ட கைக்கடிகாரத்தைக் கண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, “மேக்ரான் வாட்சை இங்கே விட்டுச் சென்றுள்ளார்” எனக் கூற, அருகில் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அவர் விட்டுச் சென்றிருந்தால் அதை என்னிடமே கொடுத்துவிடுங்கள்” என நகைச்சுவையாகக் கூறினார். மேலும், டென்மார்க்கின் கிரீன்லாந்து பகுதியை வாங்கும் தனது பழைய ஆசையை ஐரோப்பிய கவுன்சில் தலைவரிடம் ட்ரம்ப் சூசகமாகக் குறிப்பிட்டதும் பதிவாகியுள்ளது.
Meloni tells world leaders that she quit smoking a month ago
Coincidentally, she last met Mr Modi a month ago also and had #Melody ! pic.twitter.com/Quh2jXwVXf
— Aman Sharma (@AmanKayamHai_) June 16, 2026
இந்த மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட, மெலோனி சிரித்துக்கொண்டே, “ஆமாம், நாம்தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள்” எனக் கூறியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் ரோமில் மெலோனிக்கு மோடி ‘மெலோடி’ டாஃபி வழங்கிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 16 மாதங்களுக்குப் பிறகு, சுமார் 5 நிமிடங்கள் இருதரப்புச் சந்திப்பை நடத்தினர். மேலும், ஜெர்மனி அதிபர் மெர்ட்ஸ், அமெரிக்காவின் 47-ஆவது அதிபரான ட்ரம்பைக் குறிக்கும் வகையில் ’47’ என்ற எண் பொறித்த கால்பந்து ஜெர்சியைப் பரிசளித்ததுடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அனைத்து தலைவர்களுக்கும் தனிப்பட்ட சைக்கிள்களைப் பரிசாக வழங்கினார் என்பதும் இந்த கசிந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது.
