இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்கு புதுவிதமான யுக்திகளை தினம் தோறும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. போன் கால், வாட்ஸப் கால், மெசேஜ் என பல வழிகளில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது.

இந்த மோசடி செய்பவர்களின் தொலைபேசி நம்பர்கள் +92என்ற நாட்டின் குறியீட்டில் தொடங்குவதாக தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலவச ஐபோன்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருள்களை பரிசாக வழங்குவதாக கூறி மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றனர். எனவே மேற்கண்ட எண்ணில் தொடங்கும் மொபைல் நம்பர் குறியீடு தொடர்பாக போன் கால் வந்தால் அதனை யாரும் எடுக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் உடனே சைபர் கிரைம் போலீசாரை அணுக வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.