தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ_பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ பாஸ் வழங்க வேண்டும் எனவும், இதற்கான தொழில் நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.