மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து இளம்பெண்களின் புகைப்படங்களைத் திருடி, ஏஐ AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாச வீடியோக்களாக மாற்றி பிளாக்மெயில் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக காவல்துறை நடத்திய சோதனையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் மொபைல் போனில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் சமூக ஊடகங்களில் இருந்து சாதாரண புகைப்படங்களை எடுத்து, அவற்றை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் அநாகரீகமான முறையில் சித்தரித்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டி, அவர்களிடம் இருந்து பெரும் தொகையைப் பறிக்க இந்த நபர் முயன்றதாகத் தெரிகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியைக் கைது செய்து அவரிடமிருந்த மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களது புகைப்படங்களைப் பகிரும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தங்களது கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
