அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதனை நிறுத்தக் கோரி அமெரிக்க நபர் ஒருவர் செய்த துணிச்சலான காரியம் இணையத்தை அதிர வைத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ‘ஃப்ரெட்ரிக் டக்ளஸ் மெமோரியல்’ பாலத்தின் உச்சத்துக்கே ஏறிய 45 வயதான கைடோ ரைக்ஸ்டாட்டர் (Guido Reichstadter), அங்கு நின்றபடி கருப்புக் கொடியை ஏந்தி போருக்கு எதிராக முழக்கமிட்டார். போர் மூண்டால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்ற சூழலில், உலக அமைதிக்காக இந்த நபர் பாலத்தின் உச்சியில் ஏறியது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

​பாலத்தின் மிக உயரமான பகுதியில் அமர்ந்து கொண்டு அவர் போராட்டம் நடத்தியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. போலீசாரும் மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து அவரை கீழே இறக்கப் போராடினர். பாலத்தின் உச்சியில் இருந்தபடியே ‘அல் ஜசீரா’ ஊடகத்திற்குப் பேட்டியளித்த கைடோ, “போர் பேரழிவைத் தரும்” என்று எச்சரித்தார். இவரது இந்த அபாயகரமான ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “அரசாங்கத்தை விட இந்த மனிதருக்குத் துணிச்சல் அதிகம்” என நெட்டிசன்கள் பலரும் இவரை ஒரு ஹீரோவாகக் கொண்டாடி வருகின்றனர்.