மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் சிக்கித் தவிக்கும் 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் புகலிடம் அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாகப் பன்னாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் வழியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த இந்தியர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தங்கியிருந்த விடுதிகளின் (Hotels) முன்பதிவு காலம் முடிவடைந்ததால், தங்குவதற்கு இடமின்றி இந்தியப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த இக்கட்டான சூழலில், துபாயில் உள்ள ‘மிசான்’ (Meezan) குழுமத்தின் தலைவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் யோகேஷ் தோஷி மீட்புக்கரம் நீட்டியுள்ளார். துபாயில் உள்ள தனது 64 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தை, பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் தங்குவதற்காக அவர் முழுமையாக வழங்கியுள்ளார்.
இங்கு தங்கும் இந்தியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து யோகேஷ் தோஷி கூறுகையில், “துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய மக்கள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் தற்காலிகத் தங்குமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 125-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர்,” எனத் தெரிவித்தார்.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தங்குவதற்கு இடமின்றித் தவித்த சக நாட்டு மக்களுக்குச் சொந்தக் கட்டடத்தையே வாரி வழங்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபரின் இந்தச் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
