மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த இளைஞரையே திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அச்சிறுமியின் தாய் மற்றும் தாய்மாமன் சேர்ந்து அவளது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
பிப்லானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த அந்தச் சிறுமிக்கு, அவரது தாய் கமலா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆனால், அந்தச் சிறுமி தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தில் விருப்பமில்லாமல், வேறொரு இளைஞரைக் காதலித்து வந்ததால் அவரையே திருமணம் செய்ய வற்புறுத்தி தாயுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, சிறுமியின் கைப்பேசியில் அவர் காதலித்த இளைஞரின் புகைப்படத்தைத் தாய் பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய்க்கும் மகளுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் எழுந்தது. ஆத்திரமடைந்த தாய் கமலா, தனது சகோதரரான விஜய் ராயின் உதவியுடன் துணியால் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
கொலைக்குப்பின், காவல்துறையினருக்குத் தெரியாமல் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடனடியாகத் தகனம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், இதுகுறித்து இரகசியத் தகவல் அறிந்த பிப்லானி காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய் கமலா மற்றும் தாய்மாமன் விஜய் ராய் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இக்கொடூரச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
