பீகார் மாநிலம் சாரண் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தில், ஒரே நாளில் நடந்த தற்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் சென்னையில் கணவனும், சொந்த ஊரில் மனைவியும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
மச்சிகாரா கிராமத்தைச் சேர்ந்த தேரஸ் என்பவரின் மகள் சப்னா குமாரி (23). இவருக்கும், ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த பப்லு குமார் (25) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. பப்லு குமார் சென்னையில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் சென்னைக்கு வேலைக்குச் சென்றுவிட, சப்னா குமாரி தனது மாமியார் சீதா தேவி மற்றும் மாமனார் ஷம்பு மகதோ ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமயன்று, மாமனார் வேலைக்கும், மாமியார் வயல்வெளி வேலைக்கும் சென்றிருந்தனர்.
வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய மாமியார் சீதா தேவி, குளிக்கச் செல்லும்போது வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்போது தனது மருமகள் சப்னா குமாரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையைக் கண்டு அதிர்ந்து அலறியடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையே, சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த பப்லுவின் தந்தைக்கு ஒரு போன் கால் வந்தது. அதில், அவரது மகன் பப்லு குமார் சென்னை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகனின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு கதறி அழுதபடியே சொந்த ஊருக்குத் திரும்பிய தந்தைக்கு, வீட்டில் தனது மருமகளும் தூக்கில் தொங்கியதைப் பார்த்ததும் நிலை குலைந்துபோனார். ஒரே நேரத்தில் மகன் மற்றும் மருமகளை இழந்த அந்த வயதான தந்தையின் கதறல் ஊர் மக்களைக் கண்கலங்க வைத்தது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பேசிய மாமியார் சீதா தேவி கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மாலையில் எனது மகன் பப்லு போனில் பேசினான். அப்போது சப்னா வேறு யாரிடமோ பேசுவதாகவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிடுமாறு ஆவேசமாகப் பேசினான். நான் அவனிடம், ‘நீ ஊருக்கு வா, நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று கூறி சமாதானப்படுத்தினேன்.
ஆனால், சென்னையில் வைத்து பப்லு தற்கொலை செய்துகொண்டதை யாரோ வீடியோ கால் மூலம் சப்னாவிற்குக் காட்டியுள்ளனர். கணவன் இறந்த அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் துடித்த சப்னாவும் அதே நாளில் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார். புதுமணத் தம்பதியினரின் இந்த சோக முடிவால் அந்த கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
