உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், வட மாநிலப் பெண்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான காரணத்தை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் விளக்கினார்.
பெண்கள் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் சாதனை படைத்திருப்பதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் உட்படத் திராவிட இயக்கத் தலைவர்களின் அயராத உழைப்பே என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். தனது தாத்தா பாட்டி கைநாட்டு வைத்த நிலையில் இருந்து, தான் முதல் பட்டதாரி முனைவராக உயர்ந்து ஆங்கிலத்தில் கையெழுத்திடும் நிலைக்கு வந்ததைப் போல, தமிழகத்தில் பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் பெண்களுக்குக் கல்வி இல்லாததால், அங்குள்ள இளம் பெண்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக பொம்மைகள் செய்தல், அரிவாள் செய்தல், ஈயம் பூசுதல் போன்ற வேலைகளைத் தேடித் தமிழ்நாட்டிற்கு ஓடோடி வருகிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற உயர் கல்வியைப் படித்து முடிக்கும் வாய்ப்பை டாக்டர் கலைஞர் ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் பாராட்டினார். மேலும், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அரசுப் பணிகளில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் கலைஞரின் திட்டம், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை வெகுவாக உயர்த்தியதையும் சுட்டிக்காட்டினார்.
பட்டம் பெற்ற மாணவிகளை வாழ்த்தி, அவர்கள் வாழ்வில் முன்னேற உற்சாகமூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
