ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது கபில் என்ற இளைஞர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு கடையில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வந்தார். அவர் கடையின் வெளியே ஒருவர் சிறுநீர் கழிப்பதைத் தடுத்ததால், அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நபர் துப்பாக்கியால் கபிலை சுட்டுக் கொன்றார். கபில் மூன்று ஆண்டுகளுக்கு முன் “டங்கி ரூட்” எனப்படும் ஆபத்தான பயணம் மூலம் பனாமா காடுகள் வழியாகவும், மெக்ஸிகோ எல்லைச் சுவரைத் தாண்டியும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

கபிலின் குடும்பம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள பராக் கலாம் கிராமத்தில் வசிக்கிறது. அவரது தந்தை ஒரு விவசாயி, சிறிய நிலம் வைத்திருக்கிறார். கபிலின் குடும்பம் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப ரூ.45 லட்சம் செலவு செய்தது. அவர் கைது செய்யப்பட்டு பின்னர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்நிலையில் கபிலின் உடலை ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் ஹரியானா அரசுகளிடம் உதவி கோரியுள்ளார் கிராமத் தலைவர் சுரேஷ் குமார் கவுதம். இதற்காக கபிலின் குடும்பம் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளது.