போபால் AIIMS மருத்துவமனையின் பல் மருத்துவப் பிரிவில், 24 வயது பெண்ணின் கீழ்த்தாடையை அவரது கால் எலும்பைப் பயன்படுத்தி மருத்துவர்கள் புதிதாக உருவாக்கி, அதில் 13 பற்களைப் பொருத்தியுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு வாயில் வீக்கமும், அடிக்கடி சீழ் உருவாகும் பிரச்சினையும் இருந்தது. பரிசோதனையில் ‘பினைன் ஓடோன்டோஜெனிக் ட்யூமர்’ என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அகற்ற, டாக்டர் அன்ஷுல் ராய் தலைமையில், ஒரு குழு பல கட்ட அறுவை சிகிச்சை செய்தது.
முதலில், 12 செ.மீ. அளவுள்ள ட்யூமரை அகற்ற, கீழ்த்தாடையை நீக்கினர், இதனால் 13 பற்களும் பாதிக்கப்பட்டன. இதனால் அந்தப் பெண்ணால் உணவு உண்ண முடியாமல் முகம் விகாரமாகி, மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர், மருத்துவர் குழு கால் எலும்பைப் பயன்படுத்தி புதிய தாடையை உருவாக்கி, 9 பல் இம்ப்லாண்டுகளைப் பொருத்தியது. 6 மாதங்களுக்குப் பிறகு, எலும்பு இணைந்து, புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இதனால், பெண்ணின் முகம் பழையபடி மாறி, உணவு உண்ணும் பிரச்சினை தீர்ந்து, மன அழுத்தம் குறைந்து, மீண்டும் புன்னகையுடன் வாழ்கிறார். இந்த அறுவை சிகிச்சை மத்திய இந்தியாவில் முதல் முறையாக நிகழ்ந்து, மருத்துவ இதழில் வெளியிடப்பட உள்ளது.
