கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்னாபி நகரில் தில்ராஜ் சிங் கில் என்ற வாலிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வான்கோவர் பகுதியைச் சேர்ந்த இவர், பொது வெளியில் வைத்து சுடப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த ராயல் கனடா போலீசார், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்க முயன்றனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் நிலவி வரும் கும்பல் மோதல்களின் பின்னணியில் இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தின் அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளிகள் தப்பிச் செல்ல வாகனங்களுக்குத் தீ வைக்கும் வழக்கமான பாணியிலேயே இதுவும் நடந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
இதனால் சமீபத்தில் அபோட்ஸ்போர்டு பகுதியில் தொழிலதிபர் தர்சன் சிங் சாஹ்சி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது தில்ராஜ் சிங் கில் படுகொலை செய்யப்பட்டுள்ளது கனடா வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
