ஒடிசா மாநிலத்தில் தனது தாயைத் தாக்க முயன்ற சிறுத்தையை 24 வயது இளைஞர் ஒருவர் வெறும் கைகளாலேயே சண்டையிட்டு அடித்துக் கொன்ற துணிச்சலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாக் மாவட்டத்தின் மொரதா பகுதியைச் சேர்ந்த சத்யபிரதா பூர்த்தி என்பவர், தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென ஒரு சிறுத்தை வேலியைக் கடந்து ஊடுருவியது.

அந்த சிறுத்தை முதலில் அங்கு காவலுக்கு இருந்த நாயைத் தாக்கிய நிலையில், சத்தம் கேட்டு ஓடிவந்த சத்யபிரதாவின் தாயையும் தாக்க முற்பட்டது. தனது தாயைக் காப்பாற்றத் துணிச்சலுடன் களமிறங்கிய சத்யபிரதா, எந்த ஆயுதமும் இன்றி அந்தச் சிறுத்தையுடன் நேரடியாகப் போரிட்டார்.

இந்தக் கடுமையான மோதலில் சத்யபிரதாவுக்கு மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. எனினும், அவர் தனது முழு பலத்தையும் திரட்டி சிறுத்தையைத் தாக்கியதில், அந்த விலங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. காயமடைந்த சத்யபிரதா உடனடியாக பரிபாதாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது.

மேலும் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு விலங்கு தானாக ஊருக்குள் புகுந்ததா அல்லது அதற்கு ஏதேனும் உடல்நலக் குறைவு இருந்ததா என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.