மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் வசந்தி தேவி அவர்கள் காலமான செய்தி தமிழகத்தில் மிகவும் வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வசந்தி தேவி, கல்வித்துறையில் மட்டுமல்லாது, பெண்ணுரிமை, சமச்சீர் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட பல தளங்களில் மாபெரும் பங்களிப்பு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றிய பேராசிரியர் வசந்தி தேவி, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் தீமைகள் குறித்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வந்தார். மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, மதவாதம் மற்றும் வியாபார நோக்கத்தைக் கல்வியில் கொண்டு வர முயற்சிக்கும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தனது இறுதி வரை பேசியவர் ஆவார்.
அரசுப் பள்ளிகளில் கலை வகுப்புகள், தேன்சிட்டு சிறார் இதழ் போன்ற திட்டங்களை பாராட்டியும், கருத்துகள் வழங்கியும் கல்வித்துறையில் அரசை ஊக்கப்படுத்தியவர் வசந்தி தேவி. அவரது மறைவு, தமிழக கல்வி மற்றும் சமூக செயற்பாட்டுத் துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும், கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
