சென்னை: தமிழகத்தில் மக்கள் நலன் குறித்த நோக்கத்தோடு, மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “நலம் காக்கும் ஸ்டாலின்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக (இன்று )ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியில் முதலாவது முகாம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இம்முகாம்கள் 38 மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

மொத்தம் 1,256 மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்ட வட்டாரத்திலும் 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள், மக்கள்தொகை அடிப்படையில் பிற மாநகராட்சிகளில் கூடுதலாக 77 முகாம்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் ஊரக பகுதிகள், பழங்குடியினர் பகுதிகள், குடிசை பகுதிகள் போன்ற மருத்துவ வசதிகள் குறைவான இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், மனநல பாதிப்பாளர்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே மருத்துவ சேவைகள் கொண்டு செல்லப்படுவதால், உயர்தர சுகாதார பராமரிப்பு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்.

இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை, இரத்த மாதிரிகள் சேகரிப்பு, இரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடுகள், எக்ஸ்ரே, எக்கோ, அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படும். நிபுணர்களின் ஆலோசனைக்கு இணையாக இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யும் வசதியும், மாற்றுத் திறனாளிகள் சான்றிதழும் இம்முகாம்களிலேயே வழங்கப்படும்.

முகாம்கள் நடைபெறும் இடங்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சமூக நலம், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனை நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாக கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு முழுமையாக பயனடைய வேண்டும் என முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.