திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனது கருத்து சர்ச்சையான நிலையில், “சட்டத்திற்கு உட்பட்டே பேசினேன், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, “சுடுகாட்டைத் தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது; அதைப்போலத்தான் பழக்கவழக்கங்களையும் மாற்ற முடியாது” என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த ‘சுடுகாடு’ ஒப்பீடு பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தரப்பு ‘பேய் கதையை’ அவிழ்த்து விடுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். பேய் கதை என்று அவர்கள் சொன்னதால்தான், அதற்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று நான் ‘சுடுகாடு’ உதாரணத்தைக் கூறினேன். இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதையும் பேசவில்லை. ஒரு வழக்கறிஞராக, முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் உரிமை எனக்கு உண்டு. சட்ட வரம்பிற்கு உட்பட்டே எனது கருத்துகளைப் பதிவு செய்தேன். திருப்பரங்குன்றம் கல் தூணில் கடந்த காலங்களில் தீபம் ஏற்றியதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதே எங்களின் கேள்வி. அவ்வாறு தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள்தான் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். கோயிலின் ஆகம விதிகள் மற்றும் மரபுகளைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பேசியுள்ள இந்த விளக்கம், தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.