தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 9-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் அன்றைய தினமே தீர்ப்பு வெளியாக இருப்பதால் படம் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்சார் விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என முன்னதாக கூறினார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நான் ஜனநாயகன் படத்தை காலையிலும் பராசக்தி படத்தை மாலையிலும் பார்க்க இருக்கிறேன். நானும் ஜனநாயகன் படம் எப்போது வரும் என்று ஆர்வத்தோடு தான் இருக்கிறேன். எனக்கும் சென்சார் போர்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நடிகர் விஜய் திமுகவை தீவிரமாக எதிர்ப்பது மிகவும் நல்லது. அதே நேரத்தில் அவர் தனியாக எதிர்த்தால் மட்டும் சாதிக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கொள்கைகளை விட கொள்ளையடிப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவது முக்கியம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.