பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளதாகவும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்தினால் அது சட்டவிரோதம் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
நிறுவனத் தலைவரே முழு அதிகாரம் கொண்டவர் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக டாக்டர் ராமதாஸ் மட்டுமே இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். கடந்த 17.12.2025 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரே தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கட்சி விதிகளின்படி, தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் பா.ம.க. சார்பாகத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள் டாக்டர் ராமதாஸிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அன்புமணி ராமதாஸிடமோ அல்லது வேறு நபர்களிடமோ கூட்டணி குறித்துப் பேசுவது சட்டப்படி செல்லாது.
நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதற்கு மாறாக யாராவது கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகக் கருதப்படும்.
தற்போதைய சூழலில் கட்சியின் முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளதை டாக்டர் ராமதாஸ் இந்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
