சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தொழிலதிபர். இவர் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் ஆதரவோடு கடந்த வாரம் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் இருக்கும் ஹோட்டலில் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் நண்பர்களுக்கு மதுபானங்கள், உயர்ரக போதை பொருட்களை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் உயர் ரக போதை பொருட்களை பயன்படுத்திய விவகாரம் குறித்து பட்டினப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் நிகழ்ச்சியில் உயர்ரக போதை பொருட்களை வழங்கியது உறுதியானது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புது மாப்பிள்ளை சந்தோஷ், அவரது நண்பர்களான தீபக், சரத்குமார் உள்ளிட்ட 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து போதை பொருட்கள் மற்றும் 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
