கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேமுதிக கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஒரு வீடியோவில் பேசியதன் மூலம் தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

​அந்த வீடியோவில் விஜய்யின் திரைப்படப் பாடலை வைச்சே அவரைத் தாக்கிப் பேசியுள்ள விஜய பிரபாகரன், “நான் அடிச்சா தாங்க மாட்டேன், நாலு மாசம் தூங்க மாட்டேன்னு நீங்கதானே அண்ணன் பாடுனீங்க? போய் பாடுங்க அண்ணே, வேணும்னா கன்னடத்துல கூடப் பாடுங்க!” என்று நக்கலாகக் கூறியுள்ளார்.

​அதுமட்டுமன்றி, “தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எல்லாரும் கூட ஓடுங்க… ஓடு ஓடு ஓடுன்னு ஓடுறா!” என்று ஏகவசனத்தில் ஒருமையில் கட்டளையிடுவது போல் அவர் பேசிய வார்த்தைகள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​இதையடுத்து, சமூக வலைதளங்களில் விஜய பிரபாகரனுக்கு எதிராகத் தவெக தொண்டர்கள் பலமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இடத்தை நிரப்ப நினைக்கும் நீங்க, பொதுவெளியில் பேசும்போது கொஞ்சம் மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும்; இதை உங்களுக்கான முதல் எச்சரிக்கையாக எடுத்துக்கோங்க!” என்றும், காவிரி போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் அரசியல் செய்வதைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.