டெல்லியின் ஜனக்புரி பகுதியில் சாலையில் மூடப்படாமல் இருந்த ஆபத்தான பள்ளத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 25 வயதான யுவராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தபோது, டெல்லி ஜல் போர்டு மூலம் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார்.

அந்தப் பகுதியில் எவ்வித எச்சரிக்கை பலகைகளோ அல்லது தடுப்புகளோ வைக்கப்படாததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சிங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட காரணத்திற்காக, டெல்லி ஜல் போர்டைச் சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் என மூன்று அதிகாரிகள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, சாலைப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.