மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், பான்குரா – மசாகிராம் ரயில் பாதையில் பெயரே இல்லாத ஒரு விசித்திர ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சுமார் 18 ஆண்டுகளாக இந்த நிலையம் பெயரின்றி இயங்கி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பொதுவாக ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒரு தனித்துவமான அடையாளம் இருக்கும் நிலையில், இங்குள்ள பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறப் பலகைகள் எந்த எழுத்துக்களும் இன்றி வெறுமையாகவே காட்சியளிக்கின்றன.
இந்த வினோதமான நிலைக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கிராமப் பஞ்சாயத்து மோதல் உள்ளது. இந்த நிலையம் ரெய்னாகர் மற்றும் ராய்நகர் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளதால், நிலையத்திற்கு தங்கள் ஊர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என இரு தரப்பினரும் பிடிவாதம் பிடித்தனர். முதலில் ‘ரெய்னாகர்’ என்று பெயரிடப்பட்டதற்கு மற்றொரு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் ஊர் மக்களிடையேயான மோதலைத் தவிர்க்கும் விதமாக, ரயில்வே நிர்வாகம் பெயர் பலகையை காலியாகவே விட்டுவிட்டது. பெயரே இல்லாவிட்டாலும், நாள்தோறும் ஆறு ரயில்கள் இங்கு நின்று செல்வதுடன் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
