திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, பெற்றோரை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வந்த குழந்தைகளுக்கு, அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர் இல்லாத நிலையில், உறவினர்களும் கைவிட்டதால், எந்த உதவியுமின்றி எதிர்காலம் குறித்து அறியாமல் தவித்து வந்த குழந்தைகளின் நிலை, பிரபல ஊடகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் குழந்தைகள் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்தனர்.
அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுடன் தொலைபேசி வாயிலாக நேரடியாக உரையாடி, அவர்களின் நிலையை கேட்டறிந்ததுடன், அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என நம்பிக்கை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். மேலும், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
