பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் எனப்படும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் பகுதியான கக்கலிபுரா அருகே உள்ள தாதகுனி என்ற இடத்தில், பிரதமர் செல்லும் வழியில் இருந்த ஒரு சுவரை ஒட்டி இந்த வெடிபொருட்கள் கிடந்தன. முன்னதாக, இன்று அதிகாலை காவல் நிலையத்திற்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ மையம் மற்றும் எச்.ஏ.எல் (HAL) விமான நிலையம் அருகே குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக உஷாரான பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில், பிரதமரின் பாதுகாப்புப் பாதையிலேயே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கோரமங்களா பகுதியில் ஒரு நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர் இதற்கு முன்பும் வி.ஐ.பி-க்கள் வரும்போது இதுபோல மிரட்டல் விடுத்து கைதானவர் என்பதும், அவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த முறை உண்மையாகவே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால், இதற்கு பின்னால் வேறு சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா அல்லது யாராவது அவரைத் தூண்டிவிட்டார்களா என்பது குறித்து போலீஸார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
