தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவம் தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால நடைமுறை மற்றும் மரபு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியிருப்பது சற்றும் ஏற்புடையதல்ல என்றும், இது தமிழ் மொழியைச் சிறுமைப்படுத்தும் செயல் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசு விழா மரபுகளை மீறிச் செயல்பட்டது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ள அவர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரால், புதிய அரசுக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே தொடக்கத்திலேயே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
