தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார். இந்தத் தோல்வி மற்றும் கட்சியின் வியூகங்கள் குறித்து எம்.எல்.ஏ-க்கள் இடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே, திமுக – அதிமுக புதிய கூட்டணி அமையப்போவதாக வெளியான தகவல்களை எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்துக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ-க்கள் அவரது தலைமை குறித்து நேரடியாகவே புகார்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் 37 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்ற மற்றொரு ரகசியக் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.பி. வேலுமணி, உதயகுமார் மற்றும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றும் இரண்டாவது நாளாக இரு தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சி.வி. சண்முகம் தலைமையிலான அணியில் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் போன்ற முக்கிய நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. மேலும், சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கக்கூடும் எனப் பேசப்படுவது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
