அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 30 உளவாளிகளைத் தாங்கள் கைது செய்துள்ளதாக ஈரான் உளவுத்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட ரகசிய வேட்டையில், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் உள்நாட்டு முகவர்கள் என மொத்தம் 30 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் சிஐஏ (CIA) மற்றும் இஸ்ரேலின் மொசாட் (Mossad) அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த உளவு நெட்வொர்க் முறியடிக்கப்பட்டது டொனால்ட் டிரம்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படும் வேளையில், பிடிபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, அமெரிக்க எஃப்பிஐ (FBI) அமைப்பால் தேடப்பட்டு வந்த ஈரானிய சைபர் கிரிமினல் முகமது மெஹ்தி ஃபர்ஹாதி ரஹீம், அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானில் போர் சூழல் மோசமடைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகள் தங்களது தூதரகங்களை மூடி வருகின்றன. டெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தைத் தற்காலிகமாக மூடுவதாக டென்மார்க் அறிவித்துள்ள நிலையில், நெதர்லாந்து ஒருபடி மேலே சென்று தனது தூதரகச் செயல்பாடுகளை அண்டை நாடான அஜர்பைஜானுக்கு மாற்றியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தூதரக ஊழியர்கள் அனைவரும் பாகு (Baku) நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் உளவுப்படை வேட்டை என ஈரான் போர்க்களமாக மாறியுள்ளதால், சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்துப் பெரும் கவலையடைந்துள்ளன. டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கைகள் போரின் போக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
