தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவுகளுக்கு மேல் தண்ணீர் வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுத்தியது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில் மீட்பு பணிகள் துரிதப்பட்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், கன மழையாலும் – பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். அப்போது, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் முழுதாக நிறைவுற்றதும், அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம்” என தெரிவித்துள்ளார்..

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி கீழமங்களக்குறிச்சியில் கனமழை வெள்ளத்தால் சேதமான வீடுகளை ஏற்கனவே நேரில் ஆய்வு செய்திருந்தோம். இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் இன்று ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைத்துத்தர அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர்.

வெள்ள பாதிப்புக்கான ஆய்வுகள் – கணக்கெடுப்புகளுக்கு பிறகு அவர்களின் கோரிக்கையை கழக அரசு நிறைவேற்றித் தருமென கூறினோம். மேலும், அங்கிருந்த சமூக நலக்கூடம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை சீரமைக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர்.திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் சமூக நலக்கூடம் அமைத்து தருவதாக உறுதி அளித்தோம்” என தெரிவித்தார்.