சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமைப் பூங்காவாக உருமாறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி மாற்றத்திற்குத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடந்த பெருங்குடி பகுதியில், ‘பயோ-மைனிங்’ (Bio-Mining) எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது அந்த நிலம் மீட்கப்பட்டு, மரங்கள் மற்றும் நடைபாதைகளுடன் கூடிய அழகிய சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தைப் பாராட்டித் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“பல ஆண்டுகளாகக் குப்பைகள் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் இன்று அழகிய பூங்காவாக மாறியுள்ளது. இதைச் சாதித்துக் காட்டிய மாநகராட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இதுபோன்ற முன்னெடுப்புகள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகமாகும்.
ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா அவர்களே.. சென்னை மாநகராட்சி, மொத்தம் உள்ள 90 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகளில், பயோ மைனிங் முறை மூலம் இதுவரை சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது. மீதமுள்ள குப்பைகளை வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதைத் முற்றிலுமாகத் தவிர்ப்பதே எங்களது நோக்கம். அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் துர்நாற்றம் வீசிய குப்பைக் கிடங்கு, இன்று பொதுமக்களுக்கான நடைபயிற்சித் தலமாகவும் பசுமைப் பகுதியாகவும் மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
