தமிழகத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இதற்குப் பகிரங்கமாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று அவர் சாடியுள்ளதோடு, தமிழ் மக்களின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது என்றும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் நேரடியாக இந்த விவகாரத்தில் குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், இந்த விவகாரம் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவில் ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் ரகசியக் கூட்டணி அமைக்க விரும்புவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளன.
குறிப்பாக, தணிக்கை விவகாரத்தில் திமுக பெரிய அளவில் வாய் திறக்காத நிலையில், காங்கிரஸ் வரிந்து கட்டிக்கொண்டு விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. ராகுல் காந்தியின் இந்த அதிரடி ஆதரவு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
