அரியானா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பிரன்ஜால் தஹியா, அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ரசிகர்களின் வரம்பு மீறிய செயலால் கடும் ஆவேசமடைந்தார்.
அரியான்வி மொழியில் ’52 கஜ் கா தாமன்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, வடமாநிலங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த சிலர் அநாகரீகமான சைகைகளைச் செய்ததோடு, பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் ஏறவும் முயன்றனர். ரசிகர்களின் இத்தகைய ஒழுங்கற்ற செயலால் அதிர்ச்சியடைந்த பிரன்ஜால், பாடுவதை பாதியிலேயே நிறுத்தி அவர்களுக்கு மேடையிலேயே கடுமையான பதிலடி கொடுத்தார்.
கூட்டத்தில் இருந்த ஒரு முதியவரை நோக்கி நேரடியாகப் பேசிய பிரன்ஜால், “தயவுசெய்து உங்கள் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள்; இங்கு பாடிக்கொண்டிருப்பது உங்கள் மகள் அல்லது சகோதரி போன்ற ஒரு பெண் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
‘தாவு’ (பெரியப்பா), எனக்கு உங்கள் மகளின் வயது தான் இருக்கும், எனவே கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், கலைஞர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாடகியின் இந்தத் துணிச்சலான பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அநாகரீகமாக நடந்தவர்களைக் கண்டித்தும், பிரன்ஜாலின் துணிச்சலைப் பாராட்டியும் இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
