கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில், முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 21 வயது இளைஞர் மஞ்சுநாத் என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மஞ்சுநாத் தனது முன்னாள் காதலியின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பதிவு பெண்ணின் குடும்பத்தினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் கிரண், வருங்கால கணவர் வேணு உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை மாலை மஞ்சுநாத்தைச் சந்திக்க அழைத்த கிரண் மற்றும் வேணு, சமூக வலைதளப் பதிவு குறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று மஞ்சுநாத் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிரண், மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாத்தை சரமாரியாகக் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
