கரூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு பரமேஸ்வரி சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு வருடத்திலேயே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி தனது கணவரை பிரிந்தார்.

அதன் பிறகு தனது உறவினரான கதிரேசன் என்பவருடன் பரமேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் பரமேஸ்வரி கர்ப்பமானார். இதனை கதிரேசனிடம் கூறி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் கதிரேசன் பரமேஸ்வரிக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே கதிரேசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடந்தது.

இதனை அறிந்த பரமேஸ்வரி நியாயம் கேட்பதற்காக கதிரேசனின் வீட்டிற்கு சென்ற போது அவரது குடும்பத்தினர் தகாத வார்த்தையால் பேசி திட்டி உள்ளனர். இதுகுறித்து பரமேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதிரேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பரமேஸ்வரி கதிரேசனுக்கு கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்து மேலும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து பிரச்சனையை முடித்துக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் தனக்கு நியாயம் கேட்டு பரமேஸ்வரி சமூக நலத்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதிரேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.