மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்து கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில், ஒரு பெண் பயணியை நடத்துநர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது.

சிவபுரியின் கரேரா பகுதியில் உள்ள சுனாரி கிராமத்தைச் சேர்ந்த மாலதி ஜோஷி என்ற பெண், தனது மகனுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது நடத்துநர் மகேந்திர ராவத்திற்கும் அந்தப் பெண்ணிற்கும் கட்டணம் தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடத்துநர், அந்தப் பெண்ணின் உடமைகளைச் சாலையில் தூக்கி எறிந்ததோடு, பெண்ணையும் பலவந்தமாகப் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். அத்தோடு நில்லாமல், நடுரோட்டில் அந்தப் பெண்ணை அடித்துத் தரதரவென இழுத்துப் போட்டார்.

தன் கண்முன்னே அம்மா தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவன், கதறி அழுதபடி நடத்துநரைத் தடுக்க ஓடிய காட்சி பார்ப்போர் நெஞ்சைக் கனக்கச் செய்துள்ளது.

“நானே பெரிய பிள்ளையாக இருந்திருந்தால் என் அம்மாவை விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்” என்பது போல அந்தச் சிறுவன் தனது கைகளை ஓங்கியபடி தடுத்த விதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள நடத்துநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.