கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒரு தனியார் பேருந்தில் வைக்கப்பட்ட எச்சரிக்கை வாசகம் இப்போது கேரளாவையே அதிரவைத்துள்ளது.

அந்தப் பேருந்தில், “பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள், கவனமாக இருக்கவும்” (There are women on bus, be careful) என்ற வாசகம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது ஏதோ பெண்களின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டது போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் ஒரு சோகமான மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒளிந்துள்ளது.

சமீபத்தில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் (41) என்ற நபர், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்தப் பெண் இது குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

தீபக் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்தப் பெண் புகழுக்காகப் பொய்யான வீடியோவைப் பரப்பினார் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, “எந்த நேரத்திலும் ஆண்கள் மீது வீண்பழி விழலாம்” என்ற அச்சத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் இத்தகைய எச்சரிக்கைப் பலகைகளை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இது ‘பெண்களுக்கு எதிரானதா’ அல்லது ‘ஆண்களுக்கான தற்காப்பா’ என்ற விவாதம் இப்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.