ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தையை வைத்திருப்பதற்காகத் தங்கள் குடும்பத்தைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததுடன், குடியிருந்த வீட்டையும் காலி செய்ய வற்புறுத்தியதாகத் தந்தை ஒருவர் இன்ஸ்டாகிராம் காணொளி வாயிலாகப் பகிர்ந்துள்ள மனவேதனை தரும் தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by the Weekend Fakeer (@saptaahant)

தனது குழந்தை மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் சற்று மாறுபட்ட நடத்தையைக் கொண்டிருப்பதால், அக்கம் பக்கத்தினர் தங்கள் வீட்டை வெளியிலிருந்து பூட்டிச் சிறை வைத்ததாகவும், அநாகரிகமான குழந்தை என்று முத்திரை குத்தித் தங்கள் குடும்பத்தையே அங்கிருந்து வெளியேறச் செய்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மற்றவர்களுக்காகத் தனது குழந்தையின் செயல் குறித்து மன்னிப்பு கேட்டு வந்ததாகவும், ஆனால் சமூகம் ஒருபோதும் இத்தகைய குழந்தைகளை மதிக்காது என்பதை உணர்ந்த பிறகு, தற்போது யாருக்காகவும் மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறைபாடுள்ள குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்குப் பயந்து தங்கள் குழந்தைகளை நினைத்து ஒருபோதும் வெட்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்குத் தேவையான இடத்தையும் கண்ணியத்தையும் கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் மற்ற பெற்றோருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.