சத்தீஸ்கரின் பிப்பரியா பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அந்த ஊர் மக்களையே உறைய வைத்துள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில், மாந்திரீகம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அங்கு ஒரு சிறுவனின் புகைப்படத்தை வைத்து சில மர்ம நபர்கள் பூஜைகளைச் செய்துள்ளனர். விசாரணையில் அந்தப் புகைப்படம், 20 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த ‘பதாக்’ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுடையது என்பது தெரியவந்தது.
அந்தச் சிறுவனின் நினைவாக அவனது குடும்பத்தினர் ஒரு கோயில் கட்டி அந்தப் புகைப்படத்தை வைத்திருந்தனர். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோயிலில் இருந்த அந்தப் புகைப்படத்தைத் திருடி வந்து, பள்ளி வளாகத்தில் வைத்து மாந்திரீகச் சடங்குகளைச் செய்துள்ளனர்.
அதிகாலையில் பள்ளிக்கு வந்த ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனால் பயந்துபோன பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்கி வருகின்றனர். பள்ளியின் பாதுகாப்புக் குறித்து இப்போது பெரிய கேள்வி எழுந்துள்ளது.
