உத்தரப் பிரதேச மாநிலத்தில், உறவினர் பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறி இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
லக்கீம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த சோனு என்ற இளைஞர், ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு கிராமத்திற்குத் தன் நண்பருடன் வந்துள்ளார். அங்குள்ள தன் உறவினர் பெண்ணுடன் அவர் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்ததாகவும், அவரை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இளைஞர்களின் நடமாட்டத்தைக் கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது சோனுவின் நண்பர் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் செல்ல, சோனு கிராம மக்களிடம் மாட்டிக்கொண்டார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை கயிற்றால் மரத்தில் கட்டி வைத்துத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த அத்துமீறல் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இப்படித் தண்டிப்பது சட்டப்படி குற்றமாகும்.
தற்போது அந்தப் பெண்ணின் மாமனார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றொரு நபரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்தும் போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
