சண்டிகரின் தனாஸ் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும் 7 வயதுச் சிறுவனின் காது மிகக் கொடூரமான முறையில் கிழிந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வறுமை காரணமாகத் தனியார் பள்ளியிலிருந்து மாற்றப்பட்டு, சமீபத்தில்தான் அந்தச் சிறுவன் இந்த அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

​சனிக்கிழமை மதியம் 1 மணி அளவில், சிறுவனின் தந்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகத்தினர், “உங்கள் மகன் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துவிட்டான்” எனக் கூறியுள்ளனர். ஆனால், செக்டர்-16 அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் காதில் தையல்கள் போடப்படும் அளவுக்குக் காயம் பலமாக இருந்ததைக் கண்ட தந்தை, இது படிக்கட்டுகளில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயமல்ல என்றும், சக மாணவர்கள் சேர்ந்து தனது மகனைத் தாக்கியதால் தான் காது கிழிந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

​முன்பும் பலமுறை தனது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பேசிய மாவட்டக் கல்வி அதிகாரி பினா ராணி, பள்ளி முதல்வரிடம் விசாரணை நடத்தி, முழுமையான விவரங்களைப் பெற்ற பிறகு தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.