தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருந்தால், காங்கிரசுக்குத் துணை முதல்வர் (DCM) பதவி கிடைத்திருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், தவெக – காங்கிரஸ் கூட்டணி மலர்ந்திருந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்றும், குறைந்தபட்சம் 60 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

​ஆனால், இத்தகைய பொன்னான வாய்ப்பு பறிபோவதற்குக் கட்சியின் சில மூத்த தலைவர்களே முக்கியக் காரணம் என்றும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறிவிட்டதாகவும், உரிய நேரத்தில் கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​திருநாவுக்கரசரின் இந்தப் பேட்டியானது தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் பலன்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து அவர் பகிரங்கமாகப் பேசியுள்ள இந்தத் தகவல்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.