கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி ஸ்டேடியத்தில் சர்வதேசக் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியைக் காணவும், மெஸ்ஸியை நேரில் தரிசிக்கவும் ரசிகர்கள் ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை மிக அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
ஆனால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் அப்போதைய நிர்வாகத்தின் கடும் குளறுபடிகள் காரணமாக, மைதானத்தின் முக்கியப் பகுதிகளில் முக்கியப் புள்ளிகள் ஆக்கிரமித்துக் கொண்டதால், ஆயிரக்கணக்கான சாதாரண ரசிகர்களால் மெஸ்ஸியை சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போனது.
தங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் செலவழித்து டிக்கெட் வாங்கியும், மெஸ்ஸியை நீண்ட நேரம் பார்க்க முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், நிகழ்ச்சியின் முடிவில் ஸ்டேடியத்தைச் சுற்றிப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது டிக்கெட் பணத்தை உடனடியாகத் திரும்பத் தரக் கோரி ரசிகர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
அப்போதிருந்து இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்கள் தங்களுக்கு நீதி கேட்டுப் பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நபான்னாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்களுக்கும் டிக்கெட் பணத்தை முழுமையாகத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
மாநில விளையாட்டுத் துறை பட்ஜெட்டில் இருந்தே இந்தத் தொகை ரசிகர்களுக்கு மீட்டுத் தரப்படும் என்றும், இதற்கான அரசாங்க நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, ஏமாற்றமடைந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
