மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் அவரது பிறந்த குழந்தையும் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைகுந்தபூர் பகுதியைச் சேர்ந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்பனா, உயிரிழப்பதற்குச் சற்று முன்பாகக் கண்ணீருடன் வெளியே ஓடிவந்து, அங்கிருந்த தனது தந்தையிடம் “அப்பா என்னை காப்பாற்றுங்கள், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என அலறிக் கதறியுள்ளார். இதனிடையே, ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்ற நிலையில், சிறிது நேரத்திலேயே தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரசவம் பார்ப்பதற்காக மருத்துவர்களும் நர்ஸ்களும் ரூ.30,000 லஞ்சம் கேட்டதாகவும், பணம் தராததால் அலட்சியமாகச் செயல்பட்டு அதிகப்படியான அனஸ்தீசியா (Anesthesia overdose) கொடுத்ததே இந்த இரட்டை மரணத்திற்கு முக்கியக் காரணம் என்றும் கல்பனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தவறிழைத்த மருத்துவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
MP : रीवा के गांधी मेमोरियल अस्पताल से चीखती हुई बाहर निकली प्रेग्नेंट महिला
◆ कुछ देर बाद ही महिला और उसके नवजात बच्चे की मौत हो गई
◆ परिजनों ने डॉक्टरों और अस्पताल स्टाफ पर उपचार में लापरवाही बरतने और समय पर इलाज नहीं किए जाने के आरोप लगाए
◆ परिजनों के हंगामे को देखते हुए… pic.twitter.com/NvMuL6EOJg
— News24 (@news24tvchannel) August 29, 2026
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நரேந்திர பிரஜாபதி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து, உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி பணியில் இருந்த 2 செவிலியர்களைச் (Nurses) சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தச் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
